குருவும் சீடனும் – பழம் .
சீடன் குருவிடம்
சென்றான் .
குருவின்
இருப்பிடமான வட்டப் பாறை காலியாக இருந்தது சீடன் பார்வையை சுழல விட்டான்.
” மேலே பார் .
நான் இங்கே இருக்கிறேன் “ குருவின் குரல் மேலிருந்து ஒலித்தது .
சீடன் மேலே
பார்த்தான் .குரு மரத்தின் கிளை ஒன்றில் அமர்ந்திருந்தார் . “ மரத்தின் மீதேறி என்ன செய்கிறீர்கள்
குருவே ? “
” பழங்களை பறித்துக்
கொண்டிருக்கிறேன் “ குருவின் பதில் வழக்கமான புன்னகையோடு வந்தது .
” பழத்திற்காக
மரமேற வேண்டுமா ? கீழிருந்து கல்லெறிந்தால் பழம் உதிரப் போகிறது . எதற்காக
மரத்தில் ஏறி ஆபத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும் ? “
குரு
புன்னகைத்தார் .
“ நன்றாக
யோசி . கீழிருந்து கல் எறிவது மேலும் ஆபத்தானது . குறி தப்பி நிறைய தடவை முயல
வேண்டியதிருக்கலாம் . பழங்கள் கல்லடி பட்டு சிதைந்து போகலாம் . அப்படி
கிடைப்பதுவும் நல்ல பழமாக இல்லாதிருக்கலாம் . கற்கள் பட்டு மரத்தின் இலைகளும்
கிளைகளும் சேதப்படலாம் . அது மட்டுமல்ல எறியப் பட்ட கல் பலமான கிளைகளில் பட்டு
உன்னையே திருப்பித் தாக்கலாம் . அது இருக்கட்டும். இதோ இந்த பழத்தை ருசித்துப்
பார் . “ குரு நன்றாக பழுத்த ஒரு பழத்தை சீடனிடம் வீசினார் .
சீடன் இரு
கைகளையும் விரித்து , மிகுந்த கவனத்துடன் பழம் சேதமடையாத வகையில் பிடித்துக்
கொண்டான் . பின்னர் பழத்தை ருசிக்க வாயருகில் கொண்டு சென்றான் .
குருவின்
புன்னகை உரத்த சிரிப்பாக மாறியது .
“ பார்த்தாயா
, பழம் சாப்பிட கல்லெறிவதை விட எளிதான ஒரு வழி இருக்கிறது . ”
சீடன்
திகைப்புடன் மேலே பார்த்தான் .
“ நாமாக எந்த
முயற்சியும் செய்யாமல் , பிறர் முயற்சியால் கிடைக்கும் பழத்தை ருசிப்பது . “
சீடன் கையில்
இருந்த பழத்தை வட்டப்பாறையில் வைத்து விட்டு , மரமேறத் தொடங்கினான் .